புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தசரா பரிசாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பணவீக்கம், விலைவாசியை கணக்கில் கொண்டு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணத்தை (டிஆர்) மத்திய அரசு அறிவிக்கிறது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் 2 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இந்த உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப் படி 53 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக அதிகரித்தது. தற்போது அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஜூலை 1 முதல் அமல்: “இந்த அறிவிப்பு தசரா மற்றும் தீபாவளி பரிசாக இருக்கும். இந்த 3 சதவீத அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்” என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இந்த அகவிலைப்படி உயர்வால் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன் பெறுவார்கள்.