புதுடெல்லி: மத்திய அரசின் அதிதீவிர முயற்சியால் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு தள்ளி வைத்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது.
சட்டரீதியான முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு ரூ.8.6 கோடி குருதிப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனிடையே நிமிஷாவின் மரண தண்டனையை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூலமாகவும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது.
இநத் சூழலில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளி வைக்கப்படுவதாக ஏமன் அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மத தலைவர் கிராண்ட் முப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார், ஏமனை சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்களுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.
இதைத் தொடர்ந்து மெஹ்தியின் சொந்த ஊரான தமரில் நேற்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏமன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும், மெஹ்தியின் சகோதரரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் நிமிஷா பிரியாவின் தாய் பிரேமா குமாரி, சாமுவேல் ஜெரோம் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.