புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா ஊக்குவிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். எனவே, கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய பொருட்களுக்கு ஏற்கெனவே உள்ள 25% வரியுடன் கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அறிவித்தார். ஆனால், இதை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
இதனிடையே, ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவுக்கு வருவார் என தோவல் தெரிவித்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக நேற்று ரஷ்யாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய துணைப் பிரதமர் டெனிஸ் மன்ட்டுரோவ் அழைப்பின் பேரில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக 19-ம் தேதி ரஷ்யா செல்கிறார்.
அங்கு 20-ம் தேதி (இன்று) நடைபெறும் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மீதான இந்தியா-ரஷ்யா அரசுகள் ஆணையத்தின் 26-வது கூட்டத்துக்கு அவர் இணை தலைமை தாங்குகிறார். மேலும் இந்தியா-ரஷ்யா வர்த்தக மன்ற கூட்டத்திலும் ஜெய்சங்கர் உரையாற்ற உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.