வல்சாத்: மகாராஷ்டிர மாநிலம் மும்பை கோரிகாவன் பகுதியை சேர்ந்தவர் அனம்தா அகமது (15). இவர் உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அங்கு 11 ஆயிரம் கிலோ வாட் உயரழுத்த கேபிளில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அனம்தாவின் வலது கை மருத்துவமனையில் துண்டிக்கப்பட்டது. இடது கை மட்டும் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டது. எனினும் கைகள் பாதிக்கப்பட்டதால் அனம்தா பெரும் மன அழுத்தத்தில் இருந்தார்.
இரண்டு ஆண்டுகள் கழிந்தன. அப்போது மும்பை கோரிகாவ்ன் பகுதியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் 4ம் வகுப்பு படிக்கும் ரியா என்ற சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டாள். பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. கடைசியில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி சூரத்தில் உள்ள கிரண் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் ரியா உயிரிழந்தாள்.
அதனால் ரியா குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் உடல் உறுப்பு தானம் அளிக்க ரியாவின் தாய் திரிஷ்னா, அவரது கணவர் பாபி ஒப்புக் கொண்டனர். அதன்பின், ரியாவின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், நுரையீரல், கைகள், குடல் மற்றும் கருவிழிகள் எடுக்கப்பட்டன. பின்னர் ரியாவின் வலது கை உடனடியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கை குளோபல் மருத்துவமனையில் அனம்தாவுக்கு பொருத்தப்பட்டது.
இந்நிலையில், சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மும்பையில் இருந்து அனம்தா குடும்பத்தினர் நேற்று குஜராத்தின் வல்சாத்துக்கு வந்து ரியா குடும்பத்தினரை சந்தித்தனர். அந்தச் சந்திப்பு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
அனம்தா வந்ததும் அவரை கட்டியணைத்து ரியாவின் குடும்பத்தினர் வரவேற்றனர். அப்போது ரியாவின் சகோதரர் ஷிவம் கையில் ராக்கி கயிறு கட்டி அனம்தா கண்ணீர் விட்டார். ஷிவம் கூறுகையில், ‘‘என் அன்பு சகோதரி ரியா ராக்கி கயிறு கட்டியது போலவே உணர்ந்தேன்’’ என்றார். அனம்தா கூறுகையில், ‘‘இன்று முதல் என் பெயர் அனம்தா என்கிற ரியா. ஆண்டுதோறும் அவருக்கு ராக்கி கயிறு கட்டுவேன்.’’ என்று உணர்ச்சிப் பெருக்கில் கூறினார்.
ரியாவின் தாய் திரிஷ்னா கூறுகையில், ‘‘ஷிவம் கையில் அனம்தா ராக்கி கயிறு கட்டிய போது, ரியாவே நேரில் வந்தது போல் தோன்றியது’’ என்று தெரிவித்தார்.