புதுடெல்லி: மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் மதமாற்றத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. சமீபத்தில் ராஜஸ்தானிலும் இத்தகைய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மதமாற்றத் தடைச் சட்டத்துக்கு தடை கோரி Citizens for Justice and Peace (CJP) என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2020-ல் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவுடன் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யூ.சிங், “மதமாற்றத் தடைச் சட்டங்கள், லவ் ஜிஹாத் என்று அழைக்கப்படும் ஆதாரமற்ற சொல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டவை. மத சுதந்திரம் என்ற பெயரில் இது தவறாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உண்மையில் அவை மதமாற்றத்தை தடை செய்ய முயலும் தன்னிச்சையான சட்டங்களே.
மதமாற்றத் தடைச் சட்டங்களின் கீழ் ஜாமீன் பெறுவது சாத்தியமற்றதாக உள்ளது. சட்டங்கள் கடுமையானதாக மாற்றப்படுகின்றன. பணமோசடி தடுப்புச் சட்டம், பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்று, மதமாற்றத் தடைச் சட்டத்தில் ஜாமீன் பெறுவதற்கு இரட்டை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருமணம் செய்து கொள்வதற்காக இருவரில் ஒருவர் மதம் மாறினால், அவரை மதமாற்றத்துக்கு தூண்டிய குற்றச்சாட்டின் கீழ் மற்றவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தகைய புகார்களை குடும்பத்தினர் மட்டுமல்லாது, மூன்றாம் தரப்பினரோ, ஆர்வமுள்ள தரப்பினரோ கூட தாக்கல் செய்யலாம் என உள்ளது” என வாதிட்டார்.
இதனிடையே, தவறான மற்றும் ஏமாற்றும் நோக்கம் கொண்ட மதமாற்றத்துக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய மனு தாக்கல் செய்தார். அப்போது, ஏமாற்றும் நோக்கமா இல்லையா என்பதை யார் கண்டுபிடிப்பார்கள் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.
அப்போது வாதத்தை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதே அஸ்வினி குமார் உபாத்யாயவின் வாதம். அதாவது, அவரது கோரிக்கை சட்டம் இயற்றுவது தொடர்பானது. இது நீதிமன்றத்தின் அதகார வரம்புக்கு அப்பாற்பட்டது” என கூறினார். இதையடுத்து, உபாத்யாயவின் மனு நீக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், 6 வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.