புதுடெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சமூக வலை தளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, தற்போது பல்வேறு வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பி உள்ளார். அவரை இந்தியா வரவேற்கிறது.
கலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மாநிலம், கடந்த 2 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பியிருக்கும் அவர் இப்போதாவது சிறிது நேரம் ஒதுக்கி மணிப்பூர் செல்வாரா? காஷ்மீரில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இதுவரை நீதியின் முன்பு நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து பிரதமர் ஆய்வு செய்வாரா?
பிரதமர் மோடியின் குஜராத் மாநிலம் இயற்கை சீற்றத்தால் சீர்குலைந்திருக்கிறது. இமாச்சல பிரதேசம் பெருவெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாநிலங்களின் நிவாரணப் பணிகளில் பிரதமர் மோடி கவனம் செலுத்துவாரா?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த முறையாவது, கூட்டத்தொடருக்கு முன்பு நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்க வேண்டும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.