இம்பால்: மணிப்பூரில் குகி – மைத்தி மோதலால் வெடித்த கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடுவார் என்று அம்மாநில தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.13) மணிப்பூருக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு அவரது பயண திட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் மாநில தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல், “நாளை மதியம் 12.30 மணி அளவில் பிரதமர் சுராசந்த்பூர் வருகிறார். சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.7,300 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதையடுத்து, இம்பாலுக்கு வருகை தரும் பிரதமர், காங்லா கோட்டை பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கிவைக்கிறார்”
பிரதமரின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து தெரிவித்த அதிகாரிகள், “பிரதமரின் வருகையை முன்னிட்டு, சுராசந்த்பூர் மற்றும் இம்பாலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சுராசந்த்பூர் அமைதி மைதானத்திலும், இம்பாலின் 237 ஏக்கர் பரப்பளவு கொண்ட காங்லா கோட்டையிலும் மத்திய – மாநில படை வீரர்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் 24 மணி நேரமும் ஆய்வு நடத்தி வருகின்றனர். மணிப்பூர் பேரிடர் மேலாண்மைப் படையின் படகுகள், கோட்டையைச் சுற்றியுள்ள அகழிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தனர்.
மணிப்பூரில் குகி – மைத்தி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023 மே முதல் மோதல் நடந்து வந்தது. இதில், 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முடியாததை அடுத்து முதல்வர் பிரோன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி முதல் அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
மணிப்பூரில் விரைவாக அமைதியை ஏற்படுத்த தவறியதற்காக எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையில் இருந்த மாநில அரசையும் மத்திய அரசையும் கடுமையாக குற்றம் சாட்டின. மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்துக்கு பிரதமர் மோடி செல்லாதது குறித்தும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், கலவரத்துக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.