புதுடெல்லி: பிஹாரின் பக்ஸரில் மணமான மறுநாளே எல்லைப் பாதுகாப்புப் பணிக்கு கிளம்பியுள்ளார் ராணுவ வீரர் ஒருவர். இதற்காக தன் கணவரை பெருமிதத்துடன் வழியனுப்பியுள்ளார் மணப்பெண்.
இந்திய ராணுவப் படையின் வீரர் என்பது பெருமைக்குரிய விஷயம். இப்பணியில் போரின்போது தேசத்துக்கு சேவை செய்வது ராணுவ வீரரின் கடமை. இதை உணர்த்தும் வகையில் பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தின் நந்தன் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான தியாகி யாதவ் வாழ்க்கை அமைந்துள்ளது. இந்திய எல்லை மாநிலமான காஷ்மீரின் ஸ்ரீநகரில் அவர் பணியமர்த்தப்பட்டு உள்ளார். இளைஞரான அவர் தன் திருமணத்துக்காக விடுப்பு எடுத்துக் கொண்டு பக்ஸர் வந்திருந்தார். இவருக்கு வெள்ளிக்கிழமை திருமணம் முடிந்தது.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு பின் எல்லையில் பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் துவங்கிவிட்டது. இதனால், இந்திய ராணுவம் தனது வீரர்களின் விடுப்பை ரத்து செய்து, அவர்களைத் தம் பணிக்கு திரும்புமாறு அறிவுறுத்தியது. இதை ஏற்று மணமான மறுநாளிலேயே பணிக்கு கிளம்பி விட்டார் ராணுவ வீரரான தியாகி யாதவ். அவரது பெற்றோர்களும் தாய்நாட்டுக்கு சேவை செய்வது முக்கியம் எனக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இவர் மணமுடித்த பெண் பிரியா யாதவும் தன் கணவர் தியாகி யாதவை பெருமிதத்துடன் வழியனுப்பி வைத்துள்ளார். இந்த நெகிழவான சம்பவம் வட மாநிலங்களின் சமூக வலைதளங்களிலும் செய்தியாகி வைரலாகி வருகிறது.
இதில் மணப்பெண்ணான பிரியா யாதவ் கூறும்போது, ‘எனது கணவர் தியாகி யாதவ், தாய்நாட்டின் மேல் பாசமும் பற்றும் நிறைந்தவர். உறுதியான எண்ணம் கொண்ட அவர், திருமணமான மறுநாளே போர்முனைக்குச் சென்றுவிட்டார். எந்தவொரு உணர்திறன் மிக்க நபரும் அந்தப் புதுமணப் பெண்ணின் உணர்வுகளையும் அவளுடைய இதயத்தில் என்ன நடக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், நான் எதைப் பற்றியும் சிந்திக்காமல் தியாகி யாதவ் தன் கடமையை செய்வதற்காகப் பெருமையுடன் வழியனுப்பி வைத்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரர் தியாகி யாதவை அவரது திருமணத்துக்கு கூடியவர்களை விட அதிக எண்ணிக்கையில் நந்தன் கிராமத்தின் சுற்று வட்டாரத்தினரும் இணைந்து வழியனுப்பி வைத்துள்ளனர்.
தியாகி யாதவின் குடும்பத்தில் பலரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள். அவரது உறவினர் ஓம்பிரகாஷ் யாதவ் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஓம்பிரகாஷின் தாயார் மங்கள் யாதவும் ராணுவத்தில் உள்ளார். பிஹாரின் இந்த யாதவ் குடும்பம் மூன்று தலைமுறைகளாக நாட்டுக்கு சேவை செய்து வருவது பெருமைக்குரியதாக அமைந்துள்ளது.