புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நாடாளுமன்றம் அருகேயுள்ள மசூதியில் நேற்று கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் உட்பட சமாஜ்வாதி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். டிம்பிள் யாதவ் முக்காடு போடாமல் சாதாரணமாக சேலை கட்டி அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து பாஜக சிறுபான்மையின மோர்ச்சா அமைப்பின் தலைவர் ஜமால் சித்திக் கூறியதாவது: வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்ற டிம்பிள் யாதவ் முறையாக ஆடை அணியாமல் மசூதி விதிமுறைகளை மீறி விட்டார்.
இது முஸ்லிம் உணர்வை புண்படுத்துவது போன்றது. மசூதிக்குள் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கட்சி கூட்டம் நடத்தியது கண்டனத்துக்குரியது. மசூதியின் இமாம் மொஹிபுல்லா நத்வி சமாஜ்வாதி உறுப்பினர் என்பதால், அவர் கட்சி கூட்டத்தை மசூதிக்குள் நடத்த அனுமதித்துள்ளார்.
இந்த கூட்டத்தை நடத்தியவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஒவைசி போன்ற முஸ்லிம் பிரதிநிதிகள் எங்கே சென்றனர். அவர்கள் அமைதி காப்பது ஏன்? சமாஜ்வாதி கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டால், வரும் 25-ம் தேதி தொழுகைக்குப்பின் நாங்களும் கூட்டம் நடத்தி தேசிய கீதம் பாடுவோம்.
அகிலேஷ் யாதவ் மசூதிக்குள் கட்சி கூட்டம் நடத்தியது, முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள் எல்லாம் தன்வசம் உள்ளதாக நம்புகிறார் எனத் தெரிகிறது. இவ்வாறு ஜமால் சித்திக் கூறினார்.
டிம்பிள் யாதவ் கூறுகையில், ‘‘பாஜக மக்களை தவறாக வழிநடத்துகிறது. மசூதிக்குள் கட்சி கூட்டம் நடைபெறவில்லை. தவறாக வழிநடத்துவதுதான் பாஜகவின் நோக்கம். ஆபரேஷன் சிந்தூர் உட்பட முக்கிய விஷயங்கள் குறித்து பேச பாஜக அரசு விரும்பவில்லை’’ என்றார். அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘மக்களை ஒன்றிணைய விடாமல் பிரிக்கவே பாஜக விரும்புகிறது. அனைத்து மதத்தின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. பாஜகவின் ஒரு ஆயுதம் தான்மதம்’’ என்றார்.