மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாட அனுமதித்த இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி பிரியங்கா சவுத்ரி.
‘ஆசிய கோப்பை 2025’ தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. டி20 கிரிக்கெட் பார்மெட்டில் இந்த தொடர் நடைபெறுகிறது. இதில் குரூப் சுற்று, ‘சூப்பர் 4’ சுற்று மற்றும் இறுதிப் போட்டி என ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்கிறது. கடந்த 2023-ல் இந்திய அணி ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
குரூப் – ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், குரூப் – பி பிரிவில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங் காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த தொடரில் மொத்தம் 19 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துபாய் மற்றும் அபுதாபியில் ஆட்டங்கள் நடைபெறும். ஒவ்வொரு அணியிலும் 17 வீரர்கள் வரை இடம்பெறலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இதை உறுதி செய்துள்ளது. இந்த தொடரில் குரூப் சுற்று போட்டி மட்டுமல்லாது சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை இந்திய அரசு அனுமதித்ததை சாடியுள்ளார் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி பிரியங்கா சவுத்ரி. “நமது சக இந்திய மக்கள் மற்றும் சீருடையில் உள்ள நமது வீரர்கள் சிந்திய ரத்தத்தை விட பணம் தான் முக்கியமா? ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பாசாங்கு செய்த இந்திய அரசுக்கு இது அவமானம். இதன் மூலம் பிசிசிஐ ஈட்ட நினைப்பது சபிக்கப்பட்ட பணம் ஆகும்” என பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை தொடர் அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுவதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்தது. அதில் ‘பிளாக்பஸ்டர் பிக்சர்’ என இந்தியா – பாகிஸ்தான் போட்டி மேற்கோள் காட்டப்பட்டு இருந்தது.