பால்கர்: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் 53 வயது காவலாளி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் காவலாளி கைது செய்யப்பட்டார். ஜூன் 15 முதல் 20 வரை நடந்த இச்சம்பவத்தில், 17 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் பள்ளியின் கேண்டீனில் நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாகவும் அர்னாலா போலீஸார் தெரிவித்தனர். பள்ளியின் நிர்வாகத்திடமிருந்து புகார் பெற்ற பிறகு, காவலாளி ரேமண்ட் வில்சன் டயஸ் மீது பிஎன்எஸ் பிரிவு 75 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 5, 8 மற்றும் 12 இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் அர்னாலா போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக, ஆகஸ்ட் 2024 இல், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பத்லாபூரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு 4 வயது சிறுமிகளை துப்புரவு தொழிலாளி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரும் போராட்டங்களை தூண்டியது. அந்த சந்தேக நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.