மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.89 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: ராய்காட் மாவட்டம், ஜைட் கிராமத்தில் உள்ள மருந்து உற்பத்தி பிரிவில் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீஸார் புதன்கிழமை சோதனை நடத்தினர். மும்பை காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.88.92 கோடி மதிப்புள்ள கேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
கேட்டமைன் உற்பத்தி தொடர்பாக மச்சிந்திர போஸ்லே, சுஷாந்த் பாட்டீல், சுபம் சுதார், ரோகன் கவாஸ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். போதப்பொருள் தடுப்பு சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்கிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.