மும்பை: மகாராஷ்டிராவில் வழிபாட்டுத் தலங்களுக்கு ஒலி பெருக்கிகளின் ஒலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மசூதிகளின் பாங்குகளை செயலி மூலம் கைப்பேசிகளில் ஒலிக்கத் துவங்கி உள்ளன.
உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் அன்றாடம் ஐந்து வேளை தொழுவதை தம் முக்கியக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். இந்த தொழுகைக்கு சற்று முன்பாக அதற்காக அழைப்பு விடுக்கும் வகையில் மசூதிகளில் அசான் என்றழைக்கப்படும் பாங்கு ஓசை ஒலிப்பதும் பல காலமாகத் தொடர்கிறது. இதில், முதல் தொழுகையான விடியலில் சூரிய உதயம் சமயத்திலும் மசூதிகளின் ஒலி பெருக்கி வாயிலாகப் பாங்கு ஒலிக்கப்படுகிறது.
இதேபோல், இந்து மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களிலும் விடியலில் ஒலி பெருக்கிகள் வாயிலாகப் பூசைகள் நடப்பதையும், பக்திப் பாடல்களும் ஒலிப்பரப்புவதும் வழக்கமே. இதனால், ஒலி மாசு ஏற்படுவதாக மும்பையில் 2017ல் பாலிவுட் பாடகரான சோனு நிகாம் தெரிவித்தப் புகார் சர்ச்சையானது. இந்து, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் எழுப்பும் ஒலிகள் மீது அரசு நடவடிக்கைக்கு அவர் கோரி இருந்தார்.
அதன் பிறகு அடங்கிப்போன ஒலி பெருக்கிகள் விவகாரம், மீண்டும் இரு மாதங்களுக்கு முன் மும்பையில் பேச்சு பொருளாக மாரியுள்ளது. இதனிடையே, புகாரின் வாயிலாக சோதனை மேற்கொண்ட மும்பை காவல் துறையினர், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிகளின் அளவைக் குறைக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், அனுமதியின்றி நடைபெற்ற வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கிகளை அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மும்பையின் மாஹிம் பகுதியிலுள்ள ஜும்மா மசூதியில் பாங்கு ஒலிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக, அம்மசூதி சார்பில் செயலியின் மூலம் கைப்பேசிகளில் பாங்கு ஒலிக்கும் முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியில் மும்பையின் ஆறு மசூதிகள் பதிவு செய்து பாங்குகளை ஒலிபரப்பத் துவங்கி உள்ளன.
இது குறித்து மாஹிம் ஜும்மா மசூதியின் முத்தவல்லி ஃபஹத் கலீல் பட்டான் கூறுகையில், ‘கட்டுப்பாடுகள் காரணமாக ரமலான் மாதத்திலும், பொது கட்டுப்பாடுகள் உள்ள நேரங்களிலும் முஸ்லிம்கள் தம் வீட்டிலிருந்தே அஸானை கேட்க இந்த செயலி உதவுகிறது. ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதில் காவல் துறையின் கண்டிப்பைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியைப் பாராட்டிய வழிபாட்டாளர்கள், ஒலிபெருக்கி அணைக்கப்பட்டிருந்தாலும், இப்போது தங்கள் மொபைல் போன்கள் மூலம் அருகிலுள்ள மசூதியின் அஸானை கேட்க முடிவதாகக் கூறி மகிழ்கின்றனர். கடந்த மூன்று நாட்களில், எங்கள் மசூதியின் பகுதிகளில் வசிப்பவர்களில் சுமார் 500 பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்’ என்று அவர் கூறினார்.
இந்த பாங்கு ஒலிக்கான செயலியை தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஆன்லைன் அஸான்’ எனும் இந்த செயலியில் தமிழ்நாட்டில் சுமார் 250 மசூதிகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பதிவு செய்பவர்களிடம் பாங்கு ஒலிப்பவரின் விண்ணப்பப் படிவம், மசூதியின் முகவரிச் சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்த செயலின் மூலம் புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் மசூதிகளின் நடவடிக்கையை மும்பை வாசிகள் வரவேற்றுள்ளனர்.