பெங்களூரு: மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ள மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் நடந்த ‘வாக்கு திருட்டு’ குறித்து விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்
மக்களவைத் தேர்தலில் நடந்ததாக கூறப்படும் ‘வாக்கு திருட்டு’க்கு எதிராக பெங்களூரு நகரில் உள்ள ஃப்ரீடம் பார்க்கில் காங்கிரஸ் கட்சி இன்று பேரணி நடத்தியது. இந்தப் பேரணியில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “2024 மக்களவைத் தேர்தலின்போது மத்திய பெங்களூரு தொகுதியில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்வதற்காக மகாதேவபுராவில் 1,00,250 போலி வாக்குகள் உருவாக்கப்பட்டன.
நாட்டில் வாக்குகளை திருட பாஜகவுடன் இந்திய தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல்களின்போது வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்ட மின்னணு வாக்காளர் தரவு மற்றும் வீடியோகிராஃபியை தேர்தல் ஆணையம் உடனடியாகப் பகிர வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் ‘குற்றச் செயலுக்கான’ ஆதாரங்களை மறைத்து, வாக்குகளைத் திருட பாஜகவுக்கு உதவுகிறார்கள் என்பதை மட்டுமே இது நிரூபிக்கிறது.
கடந்த ஆறு மாதங்களில் லட்சக்கணக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கணக்கிட்டு நாங்கள் மேற்கொண்ட ஆய்வில், போலியான முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. ஒரே முகவரியில் எண்ணற்ற வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர். செல்லாத புகைப்படங்கள் கண்டறியப்பட்டன மற்றும் முதல் முறை வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ தவறாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், பாஜகவுக்காக தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது, அரசியலமைப்பிற்காக செயல்பட வேண்டும். அரசியலமைப்பையும் நாட்டின் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பது தேர்தல் ஆணையத்தின் கடமை.
மகாதேவபுரா தொகுதி ‘வாக்கு திருட்டு’ ஓர் உதாரணம் மட்டுமே. இந்த முறையின் மூலம்தான் பிரதமர் நரேந்திர மோடி தனக்குத் தேவையான 25 இடங்களைத் திருடி ஆட்சியில் நீடிக்க முடிந்தது. இந்த இடங்கள் அனைத்திலும் சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்களின் உண்மையான தரவு எங்களிடம் காகிதத்தில் உள்ளது. தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்றால், இதுபோன்ற ‘குற்றச் செயல்கள்’ கர்நாடக மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, நாடு முழுவதும் செய்யப்பட்டுள்ளன என்பதை நிரூபிக்க எங்கள் ஆய்வையும், பிரச்சாரத்தையும் தொடர்வோம்.
நீங்கள் ஆதாரங்களை மறைக்க முடியாது. நீங்கள் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கர்நாடக மக்களுக்கு எதிரான இந்தக் குற்றச் செயல் குறித்து கர்நாடக அரசு விசாரித்து, ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களைச் சேர்த்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாதேவபுராவில் உண்மை வெளிவர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.