லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாதிப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வர காவல்துறை ஆவணங்களிலும், பொது இடங்களிலும் சாதி குறித்த குறிப்புகளை முழுமையாக தடை செய்து உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்த உத்தரப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில தலைமைச் செயலர் தீபக் குமார், அனைத்து துறைகளுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி முதல் தகவல் அறிக்கை, கைது மெமோ, காவல்துறை குறிப்புகள் ஆகியவற்றில் ஒருவரின் சாதியைக் குறிப்பிட முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதி பெயர்களுக்குப் பதிலாக சம்பந்தப்பட்டவரின் தந்தையின் பெயரை குறிப்பிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், காவல்நிலைய அறிவிப்புப் பலகைகளில் காட்டப்படும் சாதி சின்னங்கள், வாசகங்கள் மற்றும் குறிப்புகளை உடனடியாக அகற்றவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதி அடிப்படையிலான பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறல்களைத் தடுக்க சமூக ஊடக தளங்களை கடுமையாக கண்காணிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், பட்டியல் சாதியினர்(எஸ்சி) மற்றும் பட்டியல் பழங்குடியினர்(எஸ்டி) சாதியினருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விஷயத்தில் சாதி அடையாளம் காண்பது அவசியமான சட்டத் தேவை உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளிலும் (SOPகள்), காவல்துறை கையேடுகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.