மும்பை: மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் விஸ்வாங் தேசாய். இவரது நண்பர் ராஜேஷ் ராஜ்பால், அரிய வகை ஓவியங்களை விற்கும் ஆர்ட் இந்தியா இன்டர்நேஷனல் என்ற கடையை நடத்துகிறார். விஸ்வாங் தேசாய்க்கு தொழிலதிபர் புனீத் பாட்டியா வுடன் பழக்கம் ஏற்பட்டது.
ஓவியங்கள் சேகரிப்பில் தனக்கு 25 ஆண்டுகள் அனுபவம் உள்ளதாக கூறி, புனீத் பாட்டியாவை கலையில் முதலீடு செய்யும்படி தேசாய் தூண்டியுள்ளார். மத்தியப் பிரதேச மகாராஜா ஒருவர் வைத்திருந்த ஓவியங்கள் தனக்கு தெரிந்த ஒருவரிடம் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதனால் கடந்த 2022-ம் ஆண்டு பிரபல ஓவியர்கள் மன்ஜித் பாவா, எம்.எப். உசைன், எஸ்.எச்.ரசா மற்றும் எப்.என் செளசா ஆகியோர் வரைந்ததாக கூறப்படும் பழைய ஓவியங்களை ரூ.17.90 கோடிக்கு வாங்கியுள்ளார்.
இந்த ஓவியங்கள் எல்லாம் பலரிடம் இருந்து மோசடியாக வாங்கப்பட்டவை. இவை அனைத்தும் போலி ஓவியங்கள் என பின்னர் தெரிந்தது. இதுதொடர்பாக தேசாய், ராஜேஷ் ராஜ்பால், அபிஷேக் ஜெயின், மணீஷ் சகாரியா உட்பட 5 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.