புதுடெல்லி: “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியது தான்தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இவ்விஷயத்தில் பிரதமர் மோடி எப்போது மவுனம் கலைப்பார்?” என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த 4 நாள் போரை நிறுத்தியது நான்தான். அந்தப் போர் அணு ஆயுத மோதலாக அதிகரிக்க இருந்தது.
அமெரிக்கா உடனான வர்த்தகத்தைப் பயன்படுத்தியதால் இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அதாவது, போரை நிறுத்துங்கள்; இல்லாவிட்டால் அமெரிக்க சந்தைகளை நீங்கள் இழப்பீர்கள். அமெரிக்க முதலீட்டையும் இழப்பீர்கள் என்று ட்ரம்ப் கூறி இருக்கக்கூடும் என தெரிகிறது.
இந்தியா, பாகிஸ்தான் உடனான வர்த்தக ஒப்பந்தம் மிக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்று முன்பு அறிவித்ததைப் போலவே தற்போதும் ட்ரம்ப் கூறுகிறார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி எப்போது தனது மவுனத்தை கலைப்பார்?.” என கேள்வி எழுப்பி உள்ளார்.
வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், “நாங்கள் பல்வேறு சண்டைகளை நிறுத்தி உள்ளோம். அதில் மிகப் பெரியது இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போர். வர்த்தகத்தின் மூலம் நாங்கள் அதனை நிறுத்தினோம். இந்தியா – பாகிஸ்தானுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். போரை நிறுத்தாவிட்டால், உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டோம் என நாங்கள் கூறினோம். அவர்கள் அணு ஆயுத மோதலுக்குச் சென்றிருக்கலாம். அதை தடுத்து நிறுத்தியது உண்மையிலேயே மிக முக்கியமானது.” என தெரிவித்துள்ளார்.