புதுடெல்லி: போதைப்பொருட்களை பயன்படுத்தாத இளையோர் என்ற கருப்பொருளில் 3 நாள் இளையோர் ஆன்மிக உச்சி மாநாடு வரும் 18-ம் தேதி வாராணசியில் தொடங்க உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா, “வளர்ச்சி அடைந்த இந்தியாவை வழிநடத்துபவர்களாக நமது நாட்டின் இளைஞர்கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது சராசரியாக 28 வயதுடையவர்கள். இது நமது இளைஞர்களை தேசிய வளர்ச்சியின் உந்து சக்தியாக ஆக்குகிறது.
2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பை பிரமதர் நரேந்திர மோடி விடுத்துள்ளார். இந்த தொலைநோக்கு அழைப்பின் பயனாளிகளாக மட்டும் இருக்காமல், நாட்டின் விதியை வடிவமைத்து மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும், முன்னணியில் இருந்து வழிநடத்துபவர்களாகவும் நமது இளைய தலைமுறையினர் இருக்க வேண்டும்.
எனினும், போதைப்பொருட்கள் பயன்பாடு, நமது இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக உள்ளது. இது, அவர்களை வாழ்க்கையின் ஒரு முக்கிய கட்டத்தில் சிக்க வைத்து, அவர்களின் முன்னேற்றத்துக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் சவால் விடுக்கிறது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆன்மிக அமைப்புகளுடன் இணைந்து, ஒரு முழுமையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குடைய போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரம் தொடங்கப்பட இருக்கிறது.
இதற்காக, புனித கங்கை பாயும் வாராணசியில் மூன்று நாள் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில், 100 ஆன்மிக அமைப்புகளின் இளைஞர் பிரிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இளைஞர் பிரதிநிதிகள் ஒன்று கூடி, போதைப் பழக்கத்தை ஒழிப்பதற்கான உத்திகளை வகுப்பார்கள்.
மாநாட்டின் முதல்நாளான ஜூலை 18-ம் தேதி, பங்கேற்பாளர்களின் வருகை மற்றும் பதிவு நடைபெறும். மாநாட்டின் 2-ம் நாளான ஜூலை 19ம் தேதி மாநாடு முறைப்படி தொடங்கும். இதில், போதைப் பழக்கத்தை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருட்களை விற்கும் வலைப் பின்னல், வர்த்தக தாக்கம், அமைப்பு ரீதியாக இளைஞர்களை அணுகுதல், உறுதிமொழி ஏற்றல் ஆகிய அமர்வுகள் இருக்கும்.
மாநாட்டின் 3-ம் நாளான ஜூலை 20-ம் தேதி போதை இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான சாலை வரைபடத்தை இறுதி செய்தல், வாராணசி பிரகடனத்தை வெளியிடுதல், செய்தியாளர்களுக்கு விளக்குதல், மாநாட்டை நிறைவு செய்தல் என அமர்வுகள் இருக்கும்” என தெரிவித்தார்.