புதுடெல்லி: தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதி்த்துள்ள உச்ச நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது.
மதுரை கொடிக்குளத்தைச் சேர்ந்த அமாவாசை தேவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், விளாங்குடியில் அதிமுக சார்பில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், பொது இடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இந்த கொடிக் கம்பங்களை, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்துக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இந்த உத்தரவை எதிர்த்து அமாவாசை தேவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெ.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வு அரசு நிலத்தில் கொடிக் கம்பங்கள் வைக்க எப்படி அனுமதி கோர முடியும், எனக்கூறி உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வும், உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவை கடந்த ஆக.14 அன்று உறுதி செய்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், கொடிமரங்களை அகற்ற வேண்டும் என்பது அரசியல் சாசன உரிமை, சமத்துவம், சுதந்திர உரிமைகளைப் பறிப்பதாகும். பொதுஇடங்கள், சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு மாநில அரசின் நி்ர்வாக உரிமையில் தலையிடுவதாகும். கருத்துரிமை, பொது இடங்களில் கூடும் உரிமைகளை மறுக்க முடியாது. கொடிகளை அகற்ற உத்தரவிடும் முன்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கோரவில்லை. எனவே கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். தற்போதுள்ள நிலையே தொடர உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது. மனுதாரர் தரப்பி்ல் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். முரளிதர் மற்றும் வழக்கறிஞர் எஸ்.பிரசன்னா ஆகியோர், இந்த வழக்கு விசாரணையில் சில முரண்பாடுகள் உள்ளன. அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டனர். அதுவரை தமிழகத்தில் பொது இடங்கள், சாலையோரங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றக்கூடாது என்றும், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.