புதுடெல்லி: வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கூறியதாவது: நிலச்சரிவு, வெள்ளம், மேகவெடிப்பு போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. அந்த வகையில் 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிதியின் கீழ் ரூ.1,066.80 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
ரூ.8,000 கோடிக்கு மேல்.. நிதி உதவியை தவிர, மாநிலங்களுக்கு தேவையான பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படையை அனுப்புவது உட்பட அனைத்து தளவாட உதவிகளையும் வழங்குவது அரசின் முன்னுரிமையாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில், அசாமுக்கு ரூ.375.60 கோடி, மணிப்பூருக்கு ரூ.29.20 கோடி, மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடி, மிசோரமுக்கு ரூ.22.80 கோடி, கேரளாவுக்கு ரூ.153.20 கோடி மற்றும் உத்தராகண்டிற்கு ரூ.455.60 கோடி மத்திய அரசின் பங்காக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட மிக அதிக கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இந்த மாநிலங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்த ஆண்டு 19 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.8,000 கோடிக்கு மேல் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.