ஜம்மு: ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் காரா, பாகிஸ்தான் எல்லையில் உள்ள ரஜவுரி பகுதிக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார்.
அவர் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையோரம் உள்ள பூஞ்ச் மற்றும் ரஜவுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மீது பீரங்கிகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 28 பேர் உயிரிழந்தனர்.
போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு காஷ்மீருக்கு வருகை தந்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது, பாகிஸ்தான் தாக்குதலில் ஒன்று அல்லது இரண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் பட்டியலை தயாரித்து தருமாறு கேட்டிருந்தார். இதன்படி, 22 பேர் பட்டியலை தயாரித்து ராகுல் காந்தியிடம் கொடுத்துள்ளோம். அவர்களின் கல்விச் செலவுக்கு தேவையான நிதியுதவி வழங்கப்படும் என ராகுல் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.