பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு ஓரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் நேற்று சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 2005-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதலே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டு வருகிறது. குறிப்பாக பெண்களை தன்னிறைவு பெற்றவர்களாக உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணியின் தொடர்ச்சியாக, பெண்களின் நலனுக்காக மேலும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இதன் கீழ் வரும் செப்டம்பர் மாதம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பயனடையலாம். அது நீண்டகால அடிப்படையில் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் கீழ், பெண்கள் தொழில் தொடங்க முதல்கட்டமாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். 6 மாதங்கள் கழித்து அவர்கள் தொடங்கிய தொழில் மதிப்பீடு செய்யப்படும். அதையடுத்து,
அவர்களின் தேவைக்கு ஏற்ப ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். மேலும் பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பதற்காக மாநிலம் முழுவதும் சந்தைகள் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.