புவனேஸ்வர்: ஒடிசாவின் புரி மாவட்டம், பாலங்கா அருகேயுள்ள பயாபர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்ம நபர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
சிறுமியின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பலத்த தீக்காயமடைந்த சிறுமியை மீட்ட கிராம மக்கள், பிப்பிலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சுமார் 70 சதவீதம் தீக்காயம் அடைந்துள்ள அவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ஒடிசா போலீஸார் கூறியதாவது: சிறுமிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பது தெரியவில்லை. சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறோம். இந்த வழக்கை முதல்வர் மோகன் நேரடியாக கண்காணிப்பதால் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறுமியை விமான நிலையம் அழைத்துச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு 10 நிமிடங்களில் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரோடு 15 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும் சென்றது. சிறுமியின் குடும்பத்தினரும் உடன் சென்றுள்ளனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.