பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலை வைத்து பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் அரசியல் செய்வதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விமர்சித்துள்ளார்.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தையொட்டி ரசிகர்கள் திரண்ட சின்னசாமி ஸ்டேடியம் வெளியே நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஐபிஎல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை என்ற எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், “பாஜகவினர் யாருக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. கர்நாடக மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மட்டுமே நான் பதில் சொல்ல வேண்டும்.
அனைத்து பாஜகவினரும் முட்டாள்கள். பாஜகவும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் [ஜேடி(எஸ்)] இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்கின்றன. இந்த சம்பவத்துக்கு மாநில அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் எங்கள் சொந்த குடும்பத்தினரைப் போன்றவர்கள். இந்த சம்பவத்தால், கர்நாடகாவும், பெங்களூருவும் தனது நற்பெயரை இழந்துவிட்டன. இதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்.
இது மிகவும் எதிர்பாராத விதமாக நடந்திருந்தாலும், நாங்கள் மற்றவர்களைக் குறை கூறவில்லை. இவ்வளவு கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. 18 ஆண்டுகள் காத்திருப்பு (ஆர்சிபியின் வெற்றிக்கான காத்திருப்பு), இளைஞர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் அனைவரும் வந்தார்கள். அது விவாதத்திற்குரியது… விஷயங்கள் நடந்துவிட்டன.
இப்போது துக்கத்தின் ஒரு பகுதியாக நாங்களும் இருக்கிறோம். உயிரிழந்தவர்களை மதிக்க விரும்புகிறோம். முதல்வரும் அதிர்ச்சியடைந்துள்ளார், உள்துறை அமைச்சரும் அதிர்ச்சியடைந்துள்ளார், முழு மாநிலமும் அதிர்ச்சியடைந்துள்ளது. மாநிலம் துக்கத்தில் உள்ளது. இவ்வளவு பெரிய கூட்டத்தை அரசாங்கம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கட்சியும் இந்தப் பிரச்சினையில் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க நாங்கள் முயற்சிப்போம்,” என்று தெரிவித்தார்.