பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் 3 பேர் துப்பாக்கியை காட்டி, 184 கிராம் எடையுள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள மாகடி சாலையில் கன்னையா லால் (46) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு 9 மணியளவில் கடையை மூட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்த 3 பேர் கடைக்குள் புகுந்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 184 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
திரைப்படத்தை போல அரங்கேறிய இந்த கொள்ளை சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து கன்னையா லால் என்பவர் அளித்த புகாரின்பேரில் மதநாயக்கனஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி போலியானதாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.