பெங்களூர்: பெங்களூருவில் சாலையில் நடந்து செல்லும் பெண்களை அனுமதி இல்லாமல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில், பெங்களூருவில் உள்ள பிரபலமான சர்ச் தெருவில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தன. அந்தப் பக்கத்தில் பெரும்பாலும் பெண்கள் நடந்து செல்வது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி பகிரப்பட்டது. இந்த நிலையில், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அனுமதி இல்லாமலேயே தன்னுடைய வீடியோக்கள் பகிரப்பட்டதாக பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம்சாட்டினார்.
அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘இந்த நபர் சர்ச் தெருவில் ஏதோ ஒன்றை படம் பிடிப்பது போல் நடித்து நடந்து செல்கிறார். ஆனால் உண்மையில், அவர் அங்கே பெண்களைப் பின்தொடர்ந்து அவர்களின் அனுமதியின்றி வீடியோ, படங்கள் எடுக்கிறார். அது எனக்கு நடந்தது. மேலும், என்னைப் போல பலருக்கும், அவர்கள் படம் பிடிக்கப்பட்டது தெரியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனது இன்ஸ்டாகிராம் பக்கம் பொதுவில் இருப்பதால், நான் பொதுவில் படம் பிடிக்க ஒப்புக்கொள்கிறேன் என்று அர்த்தமல்ல. அந்த நபர் பகிர்ந்த எனது வீடியோவின் விளைவாக, அறிமுகமில்லாத பலர் ஆன்லைனில் எனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பினர்’ எனக் குற்றம் சாட்டினார்.
இந்தப் பதிவில் பெங்களூரு காவல் துறை, பெங்களூரு சைபர் க்ரைம் காவல் துறையையும் அவர் டேக் செய்திருந்தார். பெண்ணின் இந்தப் பதிவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சம்மந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்காணித்து அதனை இயக்கிய குர்தீப் சிங் (26) என்பவரை கைது செய்தனர். தற்போது வேலையில்லாமல் இருக்கும் ஹோட்டல் மேலாண்மை பட்டதாரியான குர்தீப் சிங், பெங்களூருவின் கேஆர் புரம் பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்தார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இதற்காக இன்ஸ்டாகிராமின் மெட்டா நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையாக அந்தக் கணக்கை நீக்கும் விவகாரத்தில், நீதிமன்ற தலையீட்டை நாடத் தயாராகி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.