பெங்களூரு: பெங்களூரு புறநகரில் பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டியில் ஈடுபட்ட சீன பெண் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ரேவ் பார்ட்டி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அதிகாலை 3 மணியளவில் சோதனையிடச் சென்றனர்.
அப்போது 31 பேர் கஞ்சா, போதைப் பொருள், மது வகைகளை அருந்திவிட்டு, நடனமாடி கொண்டிருந்தனர். அதில் 28 வயதான சீனாவை சேர்ந்த பெண் பொறியாளரும் இருந்தார்.
இதையடுத்து போலீஸார் 31 பேரையும் பிடித்து, அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 31 பேரும் பவுரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் பெங்களூரு மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
ரேவ் பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர் மீதும் தேவனஹள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த கும்பலுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்தவர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.