பெங்களூரு: தெரு நாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக உயிருக்குப் போராடிய தாவனகேரைச் சேர்ந்த நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.
சாஸ்திரி லேஅவுட்டைச் சேர்ந்த கதீரா பானு எனும் 4 வயது சிறுமி கடந்த ஏப்ரல் 27 அன்று தனது வீட்டுக்கு வெளியே விளையாடும்போது தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டார். சிறுமியின் முகம் மற்றும் உடலின் பிற பகுதிகளில் நாய் பலமாக கடித்தது. தொடக்கத்தில் அவருக்கு தாவனகேரில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஏப்ரல் 28 அன்று ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட கதீரா, சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால், இம்மாத தொடக்கத்தில் கடுமையான மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதால், சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. பரிசோதனைகளின் முடிவில் சிறுமிக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தும் ‘டம்ப் ரேபிஸ்’ நோய் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சிறுமி உயிரிழந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், கர்நாடகாவில் 2.8 லட்சம் நாய்க்கடி பாதிப்புகளும், 26 சந்தேகத்துக்கிடமான ரேபிஸ் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக கர்நாடக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் ரேபிஸ் உயிரிழப்புகள் அதிகரித்ததை அடுத்து, டெல்லி – என்சிஆரில் எட்டு வாரங்களுக்குள் பொது இடங்களில் இருந்து அனைத்து தெரு நாய்களையும் அகற்றி, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என ஆகஸ்ட் 11 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.