பெங்களூரு: பெங்களூருவில் 4 வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் ரேபீஸ் நோய் தாக்கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிகழாண்டில் ஜூலை வரை 2.81 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் அண்மையில் உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த ஏப்ரலில் பெங்களூருவில் உள்ள தாவரகெரேவைச் சேர்ந்த கதிரா பானு (4) என்ற பெண் குழந்தை தனது வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது தெருநாய் கடித்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் கதிரா பானுவுக்கு ரேபீஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக பணம் செலவு செய்யப்பட்டது.
ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அந்த குழந்தை பெங்களூரு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி காதிரா பானு நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.