புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முடங்கின. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தொடர்ச்சியாக 5 நாட்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின.
இதைத் தொடர்ந்து கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. கடந்த 29, 30 ஆகிய தேதிகளில் மாநிலங்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதன்பிறகு நேற்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. மக்களவை தொடங்கியதும் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பின. அவையை நடத்த முடியாத சூழலில் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பிற்பகல் 4 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது வழக்கம்போல எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். எனவே நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும் பிஹார் வாக்காளர் பட்டியல் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இதனால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாநிலங்களவை கூடியபோது அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகலில் மாநிலங்களவை கூடியபோது அதே அமளி நிலை நீடித்ததால் மாலை 4.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முழுமையாக முடங்கின.