புதுடெல்லி: பிஹாரில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் சிறப்பு திருத்தப் பணி மேற்கொண்டது. 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க தேவையான ஆவணங்களை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹாரில் சமீபத்தில் வெளியானது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே. என்றாலும் இதனை இறுதிப் பட்டியல் என்ற தோற்றத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.
பெயரை தவறாக சேர்த்தது அல்லது நீக்கியதை சுட்டிக்காட்ட ஆக. 1 முதல் செப். 1 வரை அவகாசம் உள்ள நிலையில் இப்போது ஏன் இவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இவர்கள் தங்களின் 1.6 லட்சம் பூத் முகவர்களிடம் ஆட்சேபனை அல்லது கோரிக்கை ஆவணங்களை ஆக. 1 முதல் செப். 1 வரை சமர்ப்பிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது.