புதுடெல்லி: பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று, வழக்கம்போல் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. அப்போது, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் பின்னணி பற்றியும் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு(எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதையடுத்து, வெளியே வந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மகர் துவார் எனும் நாடாளுமன்ற வாயிலில் கூடி பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பிக்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், ஜோதிமணி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, ஆ. ராசா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மிசா பாரதி, மனோஜ் ஜா உள்ளிட்ட ஏராளமான எம்பிக்கள் கைகளில் எஸ்ஐஆர்-க்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் ஜா, “ஜனநாயகத்தில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஜனநாயகத்துக்கு பாதுகாப்பு இருக்காது. எனவே, இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.” என வலியுறுத்தினார்.