பாட்னா: பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செயல்படுத்தப்படும் முறை ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் இந்த பணியின் மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள தகுதியற்ற பெயர்கள் நீக்கப்படும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பதிவு இருப்பின் அது சரி செய்யப்படும், தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், “இந்திய தேர்தல் ஆணையம் பாஜக அலுவலக உத்தரவின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. சிறப்பு தீவிர திருத்தத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. மாறாக, அது செயல்படுத்தப்படும் முறையையே எதிர்க்கிறோம். ஏனெனில், அது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானதாக உள்ளது.
இது தொடர்பாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பைக் கூட நடத்தவில்லை. நாங்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஜனநாயகத்தின் பிறப்பிடம் பிஹார். அது இங்கே கொல்லப்படுவதை எங்களால் பார்க்க முடியாது. இந்த விவகாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாநிலம் தழுவிய பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மேலும், நாட்டின் முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுத உள்ளோம். வரும் 19-ம் தேதி காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் நடைபெற உள்ள இண்டியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறோம்.” என தெரிவித்தார்.