புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி முடிந்தநிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த 1-ம் தேதி வெளியிட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தன.
முன்னதாக, உச்ச நீதிமன்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை தேர்தல் ஆணையம் அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை மீண்டும் இணைக்க மனு அளிக்கலாம்.
இதற்கு ஆதார் அட்டையை சான்றாக அளிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பெயர் சேர்ப்பதற்கான 11 ஆவணங்களுடன் ஆதாரையும் இணைக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
பிஹாரில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஏன் உதவவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. “அரசியல் கட்சிகள் தங்கள் பணியை செய்யவில்லை. அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி அளவிலான முகவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர்? இவர்கள் வாக்காளர்களுக்கு உதவ வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.