பாட்னா: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் பெருமளவில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிஹார் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல. அவை வெளிப்படையாக பொதுமக்களின் பார்வைக்காகவும், வாக்காளர்கள், அரசியல் கட்சிகளிடமிருந்து கருத்து மற்றும் ஆட்சேபனைகளை பெறுவதற்காகவும் வெளியிடப்பட்டுள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவற்றை வைத்து, அவை ‘இறுதியானது’ அல்லது ‘சட்டவிரோத சேர்க்கை’ என்று கருத முடியாது. ஏனெனில் சட்ட ரீதியான உரிமைகோரல்கள், ஆட்சேபனைகள் மற்றும் அதைத் தொடர்ந்து தேர்தல் பதிவு அதிகாரிகளின் சரிபார்ப்பு மூலம் இறுதிப் பட்டியல் வெளியாகும்.
ஊடகங்களில் 15 தொகுதிகளில் 67,826 போலி வாக்காளர்கள் என செய்தி வெளியாகியுள்ளது. ஆவணங்கள் மற்றும் கள சரிபார்ப்பு இல்லாமல், இவற்றை போலி வாக்காளர்கள் என உறுதியாக நிரூபிக்க முடியாது. பிஹாரில், குறிப்பாக கிராமப்புற தொகுதிகளில், பல நபர்கள் ஒரே மாதிரியான பெயர்கள், பெற்றோர் பெயர்கள் மற்றும் ஒத்த வயதுடையவராக இருப்பது பொதுவானது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற பெயர்கள் கள சரிபார்ப்புக்கு உட்பட்டவை. இப்பட்டியலில் ஒத்த பதிவுகள் கண்டறியப்பட்டால், அவை அடையாளம் காணப்பட்டு அகற்றப்படுகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், அனைவரும் தங்கள் ஆட்சேபனைகளை தேர்தல் பதிவு அதிகாரிக்கு தெரிவிக்கலாம்.
மக்கள்தொகை ரீதியாக ஒத்த பதிவுகளை (DSEs) கண்டறிய ERONET 2.0 மென்பொருளைப் பயன்படுத்துகிறோம். பின்னர் அவை நீக்கத்திற்கு முன்பு பூத் நிலை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பதிவு அதிகாரிகளால் களத்தில் சரிபார்க்கப்படுகின்றன. இந்த வழிமுறை உண்மையான வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதி செய்கிறது.
வால்மீகி நகரில் 5,000 போலி வாக்காளர்கள் தொடர்பான விரிவான ஆதாரங்கள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுகுறித்து விசாரிக்க முடியும். கற்பனை அடிப்படையில் ஒரு எண்ணை கூறுவது பொருத்தமாக இருக்காது.
லட்சக்கணக்கான போலி வாக்குகள் மாநிலம் முழுவதும் இருக்கலாம் என்பது போன்ற பொத்தாம் பொதுவான ஊகங்களை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது. பெரிய அளவிலான போலி வாக்காளர்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் புள்ளிவிவர கணிப்புகள் அல்ல, சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை கூறியுள்ளன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.