புதுடெல்லி: பிஹார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான உத்தரவுகளின்படி, பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல்கள் நாளை அதாவது வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 1, 2025 அன்று அதிகாரபூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட உள்ளது. பிஹாரின் 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் (DEO) பிஹாரில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் காகித பட்டியலாகவும், டிஜிட்டல் நகல்களாகவும் வழங்கப்படும்.
பிஹாரின் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல் பதிவு அதிகாரிகள் ஆகியோரிடம், எந்த ஒரு வாக்காளரோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியோ ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 1 வரை காணாமல் போன தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களைச் சேர்ப்பது, தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது, வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக கோரிக்கைகளை முன்வைக்கலாம்” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.