பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார் பாட்னாவில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவ. 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேந்திர குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் இன்று பிஹார் தலைநகர் பாட்னா செல்கின்றனர்.
அவர்கள் இன்றும் நாளையும் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இதன் அடிப்படையில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து பிஹார் அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: சாத் பண்டிகை அக்டோபர் 28-ம் தேதி நிறைவடைகிறது. இதன்பிறகே தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறையும் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்படலாம். அக்டோபர் 31 முதல் நவ. 2-க்குள் முதல்கட்ட தேர்தல் நடைபெறக்கூடும். நவம்பர் 5 முதல் 7-ம் தேதிக்குள் 2-ம் கட்ட தேர்தல் நடத்தப்படலாம். நவ.10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறலாம்.
பிஹாரில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. என்டிஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து வரும் 8-ம் தேதி டெல்லியில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெகா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
எனவே வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு 70 தொகுதிகளை ஒதுக்க ஆர்ஜேடி கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் 76 தொகுதிகளை கோரி வருகிறது. மேலும் மெகா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விஐபி கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்பதால் குழப்பம் நீடிக்கிறது. இவ்வாறு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.