புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடும் நோக்கில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக, அம்மாநிலத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட 6 தேசிய கட்சிகள் மற்றும் 6 பிஹார் மாநில கட்சிகளுடன் கடந்த 4ம் தேதி ஆலோசனை நடத்தியது. பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, சிபிஎம், காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள், சிபிஐ(எம்எல்) விடுதலை, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகிய 6 மாநில கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டன.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் மாநில பாஜக தலைவர் உமேஷ் குஷ்வாகா கூறும்போது, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை இரு கட்டங்களாக நடத்த வேண்டும். புர்கா அணிந்து வரும் பெண்களின் முக அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். மத்திய பாதுகாப்பு படைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சஞ்சய் ஜா கூறும்போது, “பிஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை கிடையாது. சட்டம், ஒழுங்கு சீராக இருக்கிறது. எனவே ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
பிஹார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம் கூறும்போது, “வாக்காளர் இறுதிப் பட்டியலில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் நீக்கப்பட்டு உள்ளனர்? புதிதாக எத்தனை பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்? எத்தனை ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டனர் ஆகிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும். எங்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதில்களை வழங்க வேண்டும்’’ என்று கோரினார்.
ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் அபய் குஷ்வாகா கூறும்போது, “வாக்குப்பதிவின்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் முறைகேடுகளை தடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
சுமார் 3 மணி நேரம் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இறுதியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறும்போது, “அனைத்து கட்சிகளின் கருத்துகள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.
பிஹாரில் மொத்தம் 243 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், பாஜக 80, ஐக்கிய ஜனதா தளம் 45, ஹெச்ஏஎம்(எஸ்) 4, 2 சுயேட்சைகள் என தேசிய ஜனநாயகக் கூட்டணி 131 தொகுதிகளைக் கொண்டுள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 77, காங்கிரஸ் 19, சிபிஐ(எம்எல்) 11, சிபிஐ(எம்) 2, சிபிஐ 2 என மகாகட்பந்தன் 111 தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்முறையும் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகாகட்பந்தனுக்கும் இடையேதான் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.