பாட்னா: பிஹாரில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரை மேற்கொண்டார். இவரது பேரணி கடந்த மாதம் 27-ம் தேதி தர்பங்கா மாவட்டத்தில் நடைபெற்றது.
அப்போது சாலையோர உணவகம் நடத்தி வரும் சுபம் என்பவரிடம் அவரது பல்சர் 220 மோட்டார் பைக்கை போலீஸார் இரவலாக பெற்றுள்ளனர். ஆனால் அந்த பைக்கை அவரிடம் திரும்ப ஒப்படைக்கவில்லை. சுபம் பல இடங்களுக்கு சென்று தேடியும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஊடகத்தினருடன் சுபம் பேசியிருந்தார்.
இதையடுத்து கடந்த 31-ம் தேதி சுபத்தை டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொலைபேசியில் அழைத்து மறுநாள் பாட்னா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்நிலையில் பாட்னாவில் கடந்த 1-ம் தேதி வாக்காளர் அதிகார யாத்திரை நிறைவு விழாவில் சுபத்துக்கு புதிய பல்சர் 220 பைக் ஒன்றை ராகுல் காந்தி பரிசாக வழங்கினார்.