சசாரம்: ‘தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் “திருடுகிறது” என்பதை முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் மூலம் பிஹார் சட்டமன்றத் தேர்தல்களைத் திருட சதி நடக்கிறது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிஹாரின் சசாரத்தில் இருந்து தனது 1,300 கி.மீ ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “பிஹாரில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெறவுள்ள ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம். பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர்களை நீக்கி, சேர்த்து வாக்குகளை “திருட” ஒரு “புதிய சதி” நடக்கிறது.
தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து நாடு முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களை திருடுகின்றன. மேலும், பிஹாரில் தேர்தலைத் திருட சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வாக்காளர்களை நீக்கி, சேர்ப்பதே அவர்களின் கடைசி சதி.
தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது, அது எப்படி வாக்கு திருட்டை செய்கிறது என்பதை இப்போது முழு நாடும் அறிந்திருக்கிறது. ‘வாக்கு திருட்டு’ குறித்த எனது செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் என்னைக் கேட்டது. ஆனால் பாஜக தலைவர்கள் அதைச் செய்யும்படி கேட்கவில்லை.
பிஹாரில் தேர்தலை திருட நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஏழைகளுக்கு அவர்களின் வாக்குரிமை மட்டுமே உள்ளது, அதை பறிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஒவ்வொரு தேர்தலிலும், பாஜக வெற்றி பெறுகிறது. மகாராஷ்டிராவில், அனைத்து கருத்துக் கணிப்புகளும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும் என்று கூறின. 2024 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அதே மகாராஷ்டிராவில் நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதால், பாஜக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. மேலும், இதுபோன்ற வாக்காளர் சேர்ப்பு நடந்த இடங்களில் எல்லாம் பாஜக வெற்றி பெற்றது” என்று அவர் கூறினார்.
பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனை முன்வைத்து இன்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பிஹாரில் ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ நடத்துகிறார்.