பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை அதிகபட்சம் இரண்டு கட்டங்களாக நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை, அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சந்து ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆறு தேசிய கட்சிகள், ஆறு மாநில கட்சிகள் என அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் பாஜக தலைவர் திலிப் குமார் ஜெய்ஸ்வால், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 28 நாட்களுக்குப் பிறகு வாக்களிக்கும் தேதிகள் இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் வலியுறுத்தினோம். ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தி முடிக்குமாறும் கோரிக்கை வைத்துள்ளோம். அப்போதுதான், வேட்பாளர்களின் செலவு குறையும். புர்கா அணிந்து வாக்களிக்க வருபவர்களின் முகம், பணியில் உள்ள பெண் அதிகாரிகளால் சோதிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
மேலும், மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் நோக்கில் துணை ராணுவப் படைகளின் கொடி அணிவகுப்பை நடத்தவும் கேட்டுக்கொண்டோம். ஆற்றங்கரைப் பகுதிகளில், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றும் வாய்ப்புகள் உள்ளதால், அத்தகைய பகுதிகளில் குதிரை ரோந்துக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளோம்” என தெரிவித்தார்.
ஐக்கிய ஜனதா தளம் செயல் தலைவர் சஞ்சய் ஜா, “சத் பண்டிகைக்குப் பிறகு ஒரே கட்டமாக தேர்தலை நடத்த எங்கள் கட்சி சார்பில் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். தேவை எனில், இரண்டு கட்டங்களாக நடத்தலாம்” என குறிப்பிட்டார்.
மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சித்ரஞ்சன் ககன், மக்களவை உறுப்பினர் அபய் குஷ்வாஹா ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 3.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, சிபிஎம், காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகிய 6 தேசிய கட்சிகள், சிபிஐ(எம்எல்) விடுதலை, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகிய 6 மாநில கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டன.
இதையடுத்து, பிஹார் மாநில ஆணையர்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மூத்த காவல் கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தையும் தேர்தல் ஆணையம் நடத்தியது.