ஜபல்பூர்: பிஹார் தேர்தலில் பெனிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக பிரபல நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நர்மதா மஹோத்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு வருகை தந்துள்ள மைதிலி தாக்கூர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். எங்கள் சொந்த ஊர் உள்ள பெனிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். எனது கிராமப் பகுதியுடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதால் அங்கு போட்டியிட விரும்புகிறேன்.
அங்கிருந்து தொடங்குவது எனக்கு கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பைத் தரும். மக்களைச் சந்திப்பது, அவர்களுடன் பேசுவது போன்றவற்றை நான் என் கிராமத்தில் இருந்து தொடங்கினால் எனக்கு இன்னும் சவுகரியமாக இருக்கும். எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை” என தெரிவித்துள்ளார்.
மதுபானி மாவட்டத்தில் உள்ள பெனிபட்டி தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த மாநில அமைச்சர் வினோத் நாராயண் ஜா உள்ளார். கடந்த 2020 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாவனா ஜாவை 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பிராமணர்கள் அதிகம் உள்ள தொகுதியாக இத்தொகுதி உள்ளது.
பிஹாரின் மதுபானி மாவட்டத்தில் பிறந்த மைதிலி தாக்கூர், சிறு வயதில் இருந்தே பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இந்தி, மைதிலி, போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடும் இவர், சமீபத்தில் தமிழ் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். அந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர் 4 வயதில் இருந்தே தனது தாத்தாவிடம் இசை கற்கத் தொடங்கி உள்ளார். 10 வயதில் இருந்தே மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சிறந்த பாடகிக்கான பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர், சமீபத்தில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும் பிஹார் பொறுப்பாளருளான வினோத் தாவ்டே, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து, இவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது ஆர்வத்தை மைதிலி தாக்கூர் வெளிப்படுத்தி உள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 14ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாக உள்ளன.