பாட்னா: பிஹார் மாநில துணை முதல்வரும், பாஜகவை சேர்ந்தவருமான விஜய் குமார் சின்ஹா பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை இருப்பதாக அந்த மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இன்று (ஆக.10) செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா பெயரில் உள்ள இரண்டு வாக்காளர் அட்டையை அவர் காண்பித்தார். அதில் விஜய் குமார் சின்ஹாவுக்கு பாட்னாவில் உள்ள பங்கிபூர் மற்றும் லக்கிஸராய் தொகுதியில் வாக்காளர் அட்டை இருப்பதாக தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டார். இது தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு பிறகு வெளியான வரைவு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
“தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளர் வரைவு பட்டியலில் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் பெயர் இரண்டு இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியே போலியானது என நாங்கள் சொல்லி வருகிறோம்.
துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை இடம்பெற்றது எப்படி? சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் நிலை அதிகாரி அவரிடம் கையொப்பம் வாங்கினாரா? இதில் யார் மீது தவறு உள்ளது?
இந்த விவகாரத்தில் விஜய் குமார் சின்ஹா மீது தவறு இருந்தால் அவர் பதவி விலக வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பக்கம் தவறு இருந்தால் மாநில தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜகவுக்கு உதவும் கருவியாக தேர்தல் ஆணையம் செயல்படக் கூடாது.
எனக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுத்த தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவுக்கு எதிராக அதே நடவடிக்கையை எடுக்குமா?” என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்கு திருட்டு: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ மோசடி நடந்துள்ளதாக அண்மையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்தார். இந்நிலையில், இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தேஜஸ்வி யாதவ் இந்த பிஹார் வாக்காளர் வரைவு பட்டியலை சுட்டிக்காட்டி புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
முன்னதாக, வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் விடுபட்டுள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இதுபோல ஏராளமானவர்களின் பெயர் விடுபட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி தம்பதியின் பெயர் கூட விடுபட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் சொல்லி இருந்தார். அதை தேர்தல் ஆணையம் மறுத்தது. மேலும், அவரது வாக்காளர் அடையாள அட்டை எண் ‘ஆர்ஏபி0456228’ என தெரிவித்தது. அவரிடம் இரண்டு வாக்காளர் அட்டை இருக்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைத்திருந்தன. இது தொடர்பாக பாட்னாவின் திகா காவல் நிலையத்தில் ராஜீவ் ரஞ்சன் என்ற வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என கடந்த ஜூன் 24-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கு குறைவான அவகாசமே உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த உத்தரவை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முடிந்து, வரைவு பட்டியலை கடந்த 1-ம் தேதி ஆணையம் வெளியிட்டது. அதில், சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.