புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மக்களவை இன்று (ஆகஸ்ட் 4) நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 11-வது நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்குக் கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் அமளி நீடித்ததை அடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, இரண்டு முக்கிய விளையாட்டு மசோதாக்கள் இன்று விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக கூட்டத்துக்கு தலைமை தாங்கிய ஜகதாம்பிகா பால் தெரிவித்தார். மேலும், மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படாவிட்டால், அவை வீரர்களுக்கு நன்மை பயக்காது என்றார். நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜுவும், விளையாட்டு அமைச்சர் மன்சுக் மண்டவியாவும் இதே கருத்தை தெரிவித்தனர்
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் ஓம் பிர்லா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஜகதாம்பிகா பால் கூறினார். ஜூலை 21 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து, தொடர்ச்சியான இடையூறுகள் காரணமாக ஒரு மசோதா கூட அவையில் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ச்சியான கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில், நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி சுங்க வரி குறித்த சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிந்தார், அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.