புதுடெல்லி: பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 15வது நாளான இன்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதலே, எதிர்க்கட்சிகள் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க கோரிக்கை வைத்து அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து முதலில் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன. 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையில், இன்று (ஆகஸ்ட் 8) மக்களவையில் தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா, 2025 பரிசீலித்து நிறைவேற்றப்பட உள்ளது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இச்சட்டத்தை முன்மொழிந்தார். மேலும், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்புச் சட்டம், 2022-ல் திருத்தங்களையும் அவர் முன்மொழிய உள்ளார்.
துறைமுகங்கள் தொடர்பான சட்டங்களை ஒருங்கிணைத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் மற்றும் இந்தியாவின் கடற்கரையை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்திய துறைமுக மசோதா, 2025-ஐ மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இன்று மக்களவையில் முன்மொழியவுள்ளார்.
ஒடிசாவின் ஜலேஸ்வரில் இரண்டு கத்தோலிக்க பாதிரியார்கள், ஒரு மத போதகர் மற்றும் இரண்டு கன்னியாஸ்திரிகள் மீது சுமார் 70 பஜ்ரங் தள உறுப்பினர்கள் சமீபத்தில் நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் எம்.பி ஹிபி ஈடன் இன்று மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கான அறிவிப்பை அளித்துள்ளார்.