புதுடெல்லி: பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை அக்டோபர் முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹார் மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளத் (ஐஜத) தலைவர் நிதிஷ் குமார் முதல்வராகப் பதவி வகிக்கிறார். மாநில சட்டப்பேரவை பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிஹார் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஹார் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இதில் ஆளும் ஐஜத – பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ், ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் பலத்த போட்டி நிலவுகிறது. பிஹார் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அத்துடன் பிஹார் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உட்பட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
பிஹாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு பிஹாரில் நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.