பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாட்னாவில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் நவம்பரில் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தேர்தல் ஆணையம் சார்பில் பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து மற்றும் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், பிரதான எதிர்க்கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விரிவான ஆலோசனை நடத்தினார். அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார்.
பிஹார் மாநில பாஜக தலைவர் உமேஷ் குஷ்வாகா கூறும்போது, “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை இரு கட்டங்களாக நடத்த வேண்டும். புர்கா அணிந்து வரும் பெண்களின் முக அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும். மத்திய பாதுகாப்பு படைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் சஞ்சய் ஜா கூறும்போது, “பிஹாரில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை கிடையாது. சட்டம், ஒழுங்கு சீராக இருக்கிறது. எனவே ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.
பிஹார் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் ராம் கூறும்போது, “வாக்காளர் இறுதிப் பட்டியலில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் நீக்கப்பட்டு உள்ளனர்? புதிதாக எத்தனை பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர்? எத்தனை ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டனர் ஆகிய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும். எங்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய பதில்களை வழங்க வேண்டும்’’ என்று கோரினார்.
ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் அபய் குஷ்வாகா கூறும்போது, “வாக்குப்பதிவின்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் முறைகேடுகளை தடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
சுமார் 3 மணி நேரம் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இறுதியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறும்போது, “அனைத்து கட்சிகளின் கருத்துகள் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.