பாட்னா: பிஹாரின் பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வனிஜா மகாவித்யாலயா, பாட்னா சட்டக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய ஆளுநர் மாளிகை முடிவு செய்தது.
இதன்படி அண்மையில் குலுக்கல் நடத்தப்பட்டது. ஒவ்வொரு கல்லூரிக்கும் தகுதியுள்ள பேராசிரியர்களின் பெயர்கள் எழுதப்பட்ட காகித சீட்டுகள் ஒரு பாட்டிலில் போடப்பட்டன. அதில் இருந்து குலுக்கல் முறையில் ஒரு காகித சீட்டு எடுக்கப்பட்டது.
இதன்படி மகத் மகளிர் கல்லூரி முதல்வராக நாகேந்திர பிரசாத் வர்மா, பாட்னா கல்லூரி முதல்வராக அனில் குமார், பாட்னா அறிவியல் கல்லூரி முதல்வராக அல்கா, வனிஜா மகாவித்யாலயா கல்லூரி முதல்வராக சுகாலி மேத்தா, பாட்னா சட்டக் கல்லூரி முதல்வராக யோகேந்திர குமார் வர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். குலுக்கல் முறைக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.