புதுடெல்லி: பிஹார், உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. டெல்லிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம் என பல மாநிலங்களில் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.
டெல்லியில் கனமழை: டெல்லியில் பெய்து வரும் மழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. டெல்லி-என்சிஆர், லஜ்பத் நகர், ஆர்கே புரம், லோதி சாலை, டெல்லி-ஹரியானா எல்லை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சாலைகளில் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பகலில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்றும், பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மழை காரணமாக, தலைநகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, இதில் ரிங் ரோடு, தெற்கு டெல்லியின் சில பகுதிகள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு டெல்லியை இணைக்கும் பல முக்கிய சாலைகளில் மிகுந்த சிரமத்துடன் வாகனங்கள் இயக்கப்பட்டன.
தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியில் பெய்த கனமழை காரணமாக மரம் விழுந்ததில் ஒரு பைக் ஓட்டுநர் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், நான்கு சக்கர வாகனம் ஒன்றும் நசுங்கியது.
உத்தரப்பிரதேசம்: உத்தரப் பிரதேசத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக, தலைநகர் லக்னோ உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல பகுதிகளில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இமாச்சலப் பிரதேச கல்வி அமைச்சர் ரோஹித் தாக்கூர், “தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக பல இடங்களில் சேதம் ஏற்பட்டு வருகிறது. நேற்று இரவு குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டன. அவை பெரும்பாலும் உள்கட்டமைப்பு தொடர்பானவை.” என தெரிவித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த ஜூன் 20 முதல் பெய்து வரும் பருவமழை காரணமாக இதுவரை 241 பேர் உயிரிழந்துள்ளனர். நேரடியாக 126 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சாலை விபத்துகள் காரணமாக 115 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (SDMA) தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. “இமாச்சலப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 396 சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் சேதமடைந்துள்ளன, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. உயிர் இழப்பு எதுவும் பதிவாகவில்லை” என்று இமாச்சல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஹார்: பிஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதல்வர் நிதிஷ் குமார் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். “பெருமழை காரணமாக பல ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கங்கை, கோசி, பாக்மதி, புர்ஹி கண்டக், புன்புன் மற்றும் காகாரா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில், இந்த ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுகின்றன. போஜ்பூர், பாட்னா, சரண், வைஷாலி, பெகுசராய், லக்கிசராய், முங்கர், ககாரியா, பாகல்பூர் உட்பட 10 மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசம்: விஜயவடாவில் பலத்த மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 51 வயது நபர் ஒருவர் நிலத்தடி நீர் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததாக விஜயவாடா நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.