புதுடெல்லி: பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சரிபார்த்தனர். இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என 65 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பிஹார் வாக்காளர் என்பதற்கான ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அடையாள அட்டை சேர்க்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், ஆதார் அட்டையை அரசு ஆவணங்கள் பட்டியலில் இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
சிறப்பு தீவிர திருத்தத்தால் பிஹார் வாக்காளர் பட்டியல் பெரும் சர்ச்சையை எதிர்கொண்ட நிலையில், தற்போது இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை அடுத்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளைக் கணக்கில் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. voters.eci.gov.in என்ற இணைய முகவரியில் சென்று பிஹார் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை பார்க்கலாம் என்று தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் கூடுதலாக 3.66 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், புதிதாக 21.53 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம், மொத்தத்தில் 47 லட்சம் பெயர்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக, கடந்த ஜூன் 24-ம் தேதி நிலவரப்படி 7.89 கோடியாக இருந்த பிஹார் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 7.42 கோடியாக குறைந்துள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.